திணைக்கள முன்னேற்றத்துக்கு ஊழியர்களின் பங்களிப்பு அவசியம்

திணைக்களம் ஒன்றின் முன்னேற்றத்திற்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.

வருமான இலக்கை அடைந்த அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட உப அஞ்சல் அதிபர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (21) நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அக்கரைப்பற்று, அம்பாறை அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தபால் திணைக்களத்திற்கு கடந்த வருடத்தை விட இவ் வருடம் 23 வீதமான வருமானத்தை கிழக்கு மாகாணம் பெற்றுக் கொடுத்துள்ளது. இதில் குறிப்பாக அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவு 53 வீதமான அதிகரிப்பைக் காட்டி முன்ணனியில் திகழ்கின்றது. இதற்காக முன்நின்று உழைத்த உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் பாராட்டுகின்றேன்.

இவ் வருட அஞ்சல் தின விழாவில் கிழக்கு மாகாணத்திற்கு 18 விருதுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான சாதனைகளை நமது தபால் குடும்பம் நிலைநாட்டி வருகின்றது. தபால் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது. தபால் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும். திணைக்களத்தின் அபிவிருத்திக்காகவும் சேவையுடனும் வருமானத்தை ஈட்டக் கூடிய வகையிலும் தபால் திணைக்களம் மாறி வருகின்றது. தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய தொழில்நுட்ப ரீதியிலான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்ப ரீதியிலான சேவைகளை வழங்கி மக்களின் நன்மதிப்பை பெற்ற திணைக்களமாக மாறியுள்ளது என்றார்.

 

(ஒலுவில் விசேட நிருபர்)

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை