முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு சமூகத்திற்கு பாதிப்பாக அமையும்

கிழக்கு மாகாண சபை முன்னாள் குழுத் தலைவர்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

"முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷம் காலத்திற்குக் காலம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கோரிக்கை நியாயமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை.

ஆனால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையும் அதனை மையப்படுத்தியதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் இனத்துவ அரசியலை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதனால் முஸ்லிம் கட்சிகளினதும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் செயற்பாடுகள் மாற்று சமூகத்தினரால் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது நாம் எதிர்பார்க்கின்ற இலக்குக்கு மாற்றமான பாதக விளைவுகளையே சமூகத்திற்கு ஏற்படுத்தி விடலாம் என்கிற அச்சம் புத்திஜீவிகள் மட்டத்தில் உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதனை நியாயமானதோர் அச்சமாகவே அரசியல் தலைமைகள் நோக்க வேண்டியுள்ளது. இன்றைய பேரினவாத அரசியல் நடப்புகளை தெளிவாக கண்டறிந்து கொண்டும் யதார்த்தத்திற்கு மாறாக முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைவு பற்றி சிந்திப்பது முட்டாள்தனமான செயற்பாடாகவே அமையும்.

தேர்தலை முன்னிறுத்தி அமைக்கப்படுகின்ற கூட்டணியானது நிரந்தர ஒற்றுமைக்கும் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குமான ஒரு இயக்கமாக அமையப்போவதில்லை. தமிழ் சமூகத்தின் நீண்ட கால உரிமைப் போராட்டத்தை முன்னிறுத்தி பெரும் அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சித்தாந்தமும் தற்போது தோற்றுப்போன ஒன்றாக மாறியிருப்பது எமக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

சில முஸ்லிம் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ரத்ன தேரர் தலைமையில் அணிதிரண்டு இனவாதிகள் நெருக்குவாரப்படுத்தியபோது சமூக நலன்கருதி சம்மந்தப்பட்டோரை பாதுகாப்பதற்காக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் எம்.பி.க்களும் சேர்ந்து அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து சமூக ஒற்றுமையை பறைசாற்றியபோதிலும் பின்னரான காலப்பகுதியில் அவர்கள், மு.கா. தலைமைக்கு எதிரான நயவஞ்சக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை இத்தருணத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

(கல்முனை விசேட நிருபர்)

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை