சீனாவில் பள்ளிவாசலை இடிக்கும் முயற்சியால் மக்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் யுனான் மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகர் ஒன்றில் உள்ள பள்ளிவாசலின் குவிவுமாடத்தை இடிக்கும் முயற்சியின்போது பெரும் எண்ணிக்கையான பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

நகு சிறு நகரில் உள்ள 13 ஆம் நூற்றாண்டின் நஜியாயிங் பள்ளிவாசலுக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதன்போது உள்ளூர் மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுதப் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தென் சீனாவின் இனப் பன்முகத்தன்மை கொண்ட யுனான் மாகாணத்தில் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சீன அரசு உத்தியோகபூர்வமாக நாத்திக சிந்தனை கொண்டிருப்பதோடு மதச் சுதந்திரத்துக்கு அனுமதி உள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. மதச் செயற்பாடுகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நஜியாயிங் பள்ளிவாசல் புதிய குவிவுமாடங்கள் மற்றும் மினாரத்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் அவைகளை அகற்றும்படி நீதிமன்றம் கடந்த 2020இல் உத்தரவிட்டது. அந்த உத்தரவை செயற்படுத்துவதாகவே அண்மைய நடவடிக்கை அமைந்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் பள்ளிவாசலுக்கு செல்வதை தடுப்பதும், சிலர் பொலிஸார் மீது கல்லெறிவதும் அங்கிருந்து வெளியாகி இருக்கும் வீடியோக்கள் காட்டுகின்றன.

பின்னர் பொலிஸார் அங்கிருந்து வாபஸ் பெற்ற நிலையில் அங்கிருந்த கூட்டத்தினர் பள்ளிவாசலுக்கு செல்வது பின்னர் வெளியான வீடியோக்கள் காட்டுகின்றன. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதோடு வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Wed, 05/31/2023 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை