PCR பரிசோதனை அறிக்ைககளின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கை

A/L , புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இன்று அறிவிப்பு

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையிலிருந்து பரவியுள்ள கொவிட் -- 19 வைரஸ் தொடர்பான நிலைமைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன், எதிர்வரும் 48 மணி நேரத்துள் வெளியாகவுள்ள பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் அடுத்தகட்ட தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அத்துடன், உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைத் தொடர்பிலும் வெளியாகவுள்ள பி.சீ.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில்தான் அரசாங்கம் தீர்மானமெடுக்கும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எதிர்வரும் 48 மணி நேரத்தில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பிரிசோதனைக்கமைவாக அடுத்தகட்ட தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதுவரையில் கிடைத்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கமைவாக 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2000ஆம் வரையான பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் அறிக்கைகள் நாளை கிடைக்கவுள்ளன. அந்த பி.சீ.ஆர். முடிவுகளின் பிரகாரம்தான் பொலிஸ் ஊரடங்கு அல்லது ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் வெளியாகவுள்ள பி.சீர்.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். நாளைய தினம் (இன்று) கல்வி அமைச்சில் இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும். மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலமாகும். எதிர்வரும் 48 மணி நேரத்தில் தீர்மானமிக்கவை.

ஆடைத்தொழிற்சாலையில் எவ்வாறு வைரஸ் பரவியதென விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று அரசாங்கம் 100 சதவீதம் வைரஸை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்காவிடின் அது கடினமான விடயமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை