கொவிட் 19 இதுவரை 708 பேருக்கு தொற்று உறுதி

நான்கு பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு அமுல்

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 708 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 321 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவு, மினுவங்கொடை பொலிஸ் பிரிவு, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரமே மறுஅறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேறு எந்தவொரு பொலிஸ் பிரிவுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லையெனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதுடன், அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியாளர்கள் சென்றுள்ள இடங்கள் பயணத் தடங்கள் உட்பட அவர்கள் தொடர்புகளை மேற்கொண்டுள்ள அனைத்து நபர்களையும் தனிப்படுத்தலுக்கு உட்படுத்தி பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி கருத்து வெளியிடுகையில்,

திவுலபிட்டிய சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் நேற்றைய தினம் மாத்திரம் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 246 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பிலிருந்த 569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 06 மணிமுதல் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேயாங்கொடை பொலிஸ் பிரிவு, மினுவங்கொடை பொலிஸ் பிரிவு, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸ் பிரிவுடன் சேர்த்து மொத்த நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு இதுவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல்வரை தொடரும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், வேறு எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லையெனவும் உரிய தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிடும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாமென அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அனைவரையும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பிரதேசத்திற்குள் பிரவேசித்தல், பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

இதே வேளை முழு நாடும் முடக்கம் என்பது எளிதான முறை, ஆனால் அது மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் தடையாக அமையுமென்றும் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று (06) இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக அந்த நபரை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறினார்.

முதல் தொற்றாளரான பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் வேலைக்கு வருவதை கருத்தில் கொண்டே நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

´அந்தஆடை தொழிற்சாலையில் 1,400 பேர் தொழில் புரிகின்றனர். 400 பேர் துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியிலுள்ளனர். மீதமுள்ள 495 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். ஆகவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை. அதனை செய்வது மிகவும் எளிதானது, ஆனால் அது நாடு முன்னேறும் வழியாக அமையாது´ என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை