வூஹான் மக்கள் கொவிட்-19 சோதனைக்கு முண்டியடிப்பு

சீனாவின் வூஹான் நகரில் புதிய கொவிட்-19 நோய்த் தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ளவர்களுக்குப் பெரியளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

குடியிருப்பாளர்கள் பலர் கார் நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் எனப் பல இடங்களில் நிறுவப்பட்ட கூடாரங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் வைரஸ் தொற்றுக்கான சோதனை அங்கு பலருக்கு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சீனாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகராக வூஹான் விளங்குவதால், கூடுதல் பாதுகாப்பிற்காக மீண்டும் பரிசோதனை செய்துகொள்கின்றனர் சிலர். கடந்த ஆண்டு இறுதியில் அங்கு வைரஸ் பரவல் தொடங்கியதை அடுத்து, ஜனவரி மாதம் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது. வூஹானில் நோய்த்தொற்றின் காரணமாகச் சுமார் 3,800 பேர் உயிரிழந்ததாக சீன அரசாங்கம் தெரிவித்தது.

சுமார் ஒரு மாதமாகப் புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏதும் அங்கு பதிவாகவில்லை.

அதனையடுத்து, மக்கள் கட்டங்கட்டமாக இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்தனர். ஆனால் கடந்த வாரஇறுதியில் புதிய சம்பவங்கள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தன.

கடந்து வந்த கடுமையான காலத்திற்கு மீண்டும் திரும்பிவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டுள்ளது. அதனால் நகரம் முழுவதும் பரிசோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆண், பெண், பெரியவர், சிறியவர் என அனைவரும் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளைச் செய்துகொள்கின்றனர். வூஹான் நகரில் கடந்த ஏப்ரல் 01 தொடக்கம் மே 13 ஆம் திகதி வரை சுமார் 1.79 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார ஆணையத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை