உலகின் மிகப்பெரிய ரொஹிங்கிய அகதி முகாமில் வைரஸ் தொற்று

பங்களாதேஷில் உள்ள உலகின் மிகப் பெரிய அகதி முகாமில் இரு ரொஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மில்லியன் அகதிகள் வசிக்கும் கொக்ஸ் பசார் அகதி முகாமிலேயே முதல் முறை வைரஸ் தொற்று சம்பவம் பதிவாகி இருப்பதாக அரச மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தவிர மேலும் சுமார் 1,900 அகதிகள் தற்போது மருத்துவ சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெரிசல் மிக்க கொக்ஸ் பசார் அகதிகள் முகாம் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது. எனினும் வசதி குறைந்த அந்த முகாம்களில் வைரஸ் வேகமாகப் பரவக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மோசமான சூழல் மற்றும் போதிய உணவு மற்றும் சுத்தமான நீர் இன்றி வாழும் இந்த முகாம்களில் இருக்கும் மக்களிடையே வைரஸ் தொற்று வேகமாக பரவக் கூடும் என்று உதவி நிறுவனங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளன.

“உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான கொக்ஸ் பசாருக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டது.

இந்த நிலை நீடித்தால் வைரஸ் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இறப்பார்கள்’’ என பங்களாதேஷின் சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் சுகாதார இயக்குனர் ஷமிம் ஜஹான் கூறியுள்ளார். மியன்மார் இராணுவத்தின் ஒடுக்குமுறை காரணமாக 2017 ஆண்டில் 730,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 தொற்று பங்களாதேஷில் அண்மைய தினங்களில் வேகம் கண்டுள்ளது. அந்நாட்டில் 18,863 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை