ஜப்பானில் கரையொதுங்கிய படகில் ஐந்து சடலங்கள்

ஜப்பான் கடற்கரையில் ஒதுங்கியுள்ள உடைந்த படகு ஒன்றுக்குள் ஐந்து சடலங்கள் மற்றும் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் பிரதான நிலத்தில் இருந்து வடமேற்காக சாடோ தீவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படகு கரையொதுங்கியுள்ளதோடு கடந்த சனிக்கிழமை அதிகாரிகள் அதற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையாகச் சேதமடைந்திருக்கும் இந்தப் படகில் கொரிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது வட கொரியாவைச் சேர்ந்ததென நம்பப்படுகிறது.

இதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இரண்டு மண்டையோடுகளும் குறித்த சடலங்களுடையனவா என்பதை பொலிஸார் உறுதி செய்யாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் எச்சங்கள் “ஓரளவு எலும்புக்கூடுகளாக” மாறியிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகாலம் கடலில் இருந்திருப்பதாக இதனை பார்க்கும்போது தெரிவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். படகில் எதுவும் இன்றி மனித எச்சங்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் குளிர் காலத்தில் படகில் இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

எனினும் வட கொரியாவுடன் ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் உள்ள சிக்கலான உறவால் சம்பவம் குறித்த விசாரணை சிரமமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை