'கவிழ்க்க முடியாத பலமான ஆட்சியே எமது நோக்கம்'

ஜனாதிபதி தேர்தலே முதலில் வேண்டும்

கவிழ்க்க முடியாத, கட்சி தாவ இயலாத பலமான ஆட்சியொன்றை எதிர்காலத்தில் உருவாக்க இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

புலத்சிங்ஹல வாராந்தச் சந்தையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  "தளம்பாத ஆட்சியே எதிர்காலத்தில் தேவை. ஒக்டோபர் 5ஆம் திகதியின் பின்னர் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சி தேர்தல்களால் ஸ்திரமான அரசை உருவாக்க இயலாது. ஜனாதிபதித் தேர்தல் மூலமே அரச அதிகாரம் தொடர்பில் தீர்க்கமான மாற்றம் ஏற்படும்.  

2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தேசிய ஜனநாயக அமைப்பு என்ற பெயரில் பரந்த அமைப்பொன்றை உருவாக்கி பலமான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க இருக்கிறோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பொதுத் தேர்தலை நடத்துவோம்.  

இந்தத் தேர்தலில் கவிழ்க்க முடியாத, கட்சி தாவ முடியாத பலமான அரசாங்கமொன்றை உருவாக்குவோம். ஸ்ரீ லங்கா மஹஜன பெரமுனைக் கட்சியினருக்கு, குடும்பத்திற்கு வெளியிலிருந்து வேட்பாளர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாது.எமது பக்கத்திலிருக்கும் ஜனநாயக முகாமில் திறமையான பலர் உள்ளனர்.மக்கள்  வழங்கிய ஆணையை ஜனாதிபதி மீறினார். 2019 ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நிமிடமும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும்.

எனவே,  உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு அவரைக் கோருகிறோம். ஏனைய தேர்தல்களை விட, ஜனாதிபதித் தேர்தலே நாட்டுக்கு அவசியம். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் புதிய பயணமொன்றுக்குச் செல்ல நாடு தயாராக இருக்கிறது" என்றார். (பா)

Thu, 03/28/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை