நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசு இஸ்ரேலில் ஆட்சி அமைப்பு

இஸ்ரேலிய வரலாற்றில் தோன்றிய தீவிர வலதுசாரி மற்றும் மதச்சார்பு அரசு ஒன்று பதவி ஏற்றுள்ளது.

பென்ஜமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, தீவிர தேசியவாத மற்றும் தீவிர பழைமைவாத யூதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த நிலையில் அவர் மீண்டும் பிரதமர் பதவிக்குத் திரும்பியுள்ளார்.

அமைதியை தொடரவும் சிவில் உரிமைகளை பாதுகாக்கவும் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (29) நடந்த சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இஸ்ரேலிய மக்களுக்குத் தமது நிர்வாகம் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டுத்தரும் என்று குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் பண மோசடிக் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்கும் நெதன்யாகுவுடன் கூட்டணி அமைக்க மிதவாதக் கட்சிகள் மறுத்த நிலையிலேயே அவர் கடும்போக்குவாதிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலிய கொடி மற்றும் வானவில் கொடிகளை ஏந்திய பல நூறு ஆர்ப்பட்டக்காரர்கள் புதிய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் “வெட்ககரமானது”, “ஆபத்தானது” மற்றும் “இனவாதிகள் ஒழிக” என குறிப்பிடப்படும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

நெதன்யாகு இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்பது இது ஆறாவது முறையாகும். 18 மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சியினர் அவரை பதவியில் இருந்து வெளியேற்றி இருந்தனர். எனினும் நாட்டை புதிய வழியில் நடத்தப்போவதாக அவரது கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

புதிய அரசின் புதிய கொள்கை கடந்த புதனன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், “யூத மக்களுக்கு இஸ்ரேலிய நிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரத்தியேகமான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத உரிமை உள்ளது” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு அங்குள்ள குடியேற்றங்களை மேம்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

1967இல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 600,000 வரையான யூதர்கள் வாழ்கின்றனர். இந்தக் குடியேற்றங்களை பெரும்பாலான சர்வதேச சமூகம் சட்டவிரோதமானது எனக் கருதுகின்றனர். தவிர, மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசின் அனுமதி இன்றியும் சுமார் 100 சிறு சிறு குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் தீவிர தேசியவாத மதச்சார்பு சியோனிச கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்தானது. அதில் இந்த சட்டவிரோத குடியேற்றங்களை சட்டபூர்வமாக்குவதற்கு நெதன்யாகு இணங்கியுள்ளார். தவிர மேற்குக் கரையை இஸ்ரேலிய ஆட்புலத்திற்குள் இணைப்பதற்கும் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

மேற்குக் கரை குடியேறியாக இருக்கும் மதச்சார்பு சியோனிசத் தலைவர் நிதி அமைச்சராக பதவி ஏற்கவிருப்பதோடு மேற்குக் கரையில் உள்ள குடியேற்றக் கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் பலஸ்தீனர்களை கட்டுப்படுத்தும் சிவில் நிர்வாகத்தின் மேற்பார்வையாளராகவும் செயற்படவுள்ளார்.

மற்றொரு குடியேறியும், தீவிர தேசியவாத அரசியல்வாதியுமான யூத சக்தி கட்சியின் தலைவர் இடமர் பென் கிவிர் தேசிய பாதுகாப்பு அமைச்சராகவுள்ளார். இவர் இனவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு அளித்ததற்காக குற்றங்காணப்பட்டவராவார்.

மேற்குக் கரை குடியேற்றங்களை மேம்படுத்தும் திட்டம் பிராந்தியத்தில் பின் விளைவை ஏற்படுத்தும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கான இரு நாட்டுத் தீர்வுத் திட்டத்தை நெதன்யாகு கூட்டணி நிராகரிக்கிறது. இந்தத் திர்வுத் திட்டம் சர்வதேச ஆதரவை பெற்ற ஒன்றாகும்.

Sat, 12/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை