விலை வரம்பு நிர்ணயித்த நாடுகளுக்கு எண்ணெய் விற்பனைக்கு ரஷ்யா தடை

மேற்கத்திய நாடுகள் இம்மாத ஆரம்பத்தில் நிர்ணயித்த விலை வரம்பை பின்பற்றும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரஷ்யா எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஜி7 நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே இணக்கம் எட்டப்பட்ட இந்த எண்ணெய் விலைவரம்பு கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.

இதன்படி ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு தலா 60 டொலருக்கு மேல் செலுத்துவதற்கு இந்த விலைவரம்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விலை வரம்பை செயற்படுத்தும் எந்த ஒரு நாட்டுக்கும் எண்ணெய் மற்றும் எண்ணெய் உற்பத்திகள் விற்கப்படமாட்டாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

வரும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை ஐந்து மாதங்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடைக்கு உட்பட்டிருக்கும் நாடுகளுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சிறப்பு அனுமதியுடன் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும் முயற்சியாகவே இந்த விலைவரம்பு கொண்டுவரப்பட்டது. இதில் ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய டாங்கர்கள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை பயன்படுத்தி ரஷ்ய எண்ணெயை வாங்கும்போதும் இந்த விலை வரம்பு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாகவே மேற்கத்திய நாடுகளிடையே இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டது.

எனினும் ஏற்கனவே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில் புதிய தடை அதில் மேலும் பாதிப்பை செலுத்தக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சவூதி அரேபியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ள ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறு சர்வதேச வலுசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக அமையும்.

Thu, 12/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை