சீனாவில் தீவிர கொவிட்-19 பரவலால் உலகளாவிய அச்சுறுத்தல் அதிகரிப்பு

சீனாவில் கொவிட் தொற்று தீவிரம் அடைந்து வரும் சூழலில் அந்நாடு வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து சீன நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் இணைந்துள்ளது.

கொவிட் சம்பவங்களில் சீன மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. எனினும் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை அடுத்தே சீனா தனது கண்டிப்பான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்தத் தளர்வை அடுத்து சீனர்கள் பலரும் வெளிநாடு செல்வதில் விரைவு காட்டி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சீன தலைநிலத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனை முடிவை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பல நாடுகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன.

“அண்மைக் காலத்தில் சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் புதிய வைரஸ் திரிபு உருவாகும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது” என்று அமெரிக்காவின் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

வைரஸ் திரிபு தொடர்பில் சீனா மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களையே வெளியிடுவதோடு தற்போது நோய்ப் பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதையும் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்து புதிய வைரஸ் திரிபு வருவதைத் தடுக்க இத்தாலி, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா கட்டுப்பாடுகளை கொண்டுவந்த நிலையில் அமெரிக்காவும் தற்போதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அமெரிக்கர்களின் உடல்நலனைப் பாதுகாக்க அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் அனைவரும் கொவிட்–19 நோய்த்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

சீனாவில் கொவிட் பரவல் தீவிரம் கண்டிருப்பது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு நேற்று (29) பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் அலையால் மருத்துவமனைகள் வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களால் நிரம்பி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் பீஜிங்களில் இருந்து தென் கிழக்காக 140 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் டியான்ஜினில் உள்ள இரு மருத்துவமனைகளில் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி இருப்பதாக அங்கு சென்ற ஏ.எப்.பி செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 12/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை