உக்ரைனிய அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஐ.நா எச்சரிக்கை

உக்ரைனின் சபொரிசியா அணுமின் நிலையம் மீது மேலும் ஷெல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக இருக்கும் இந்த அணு ஆலையின் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்தின் மீது கடந்த வியாழக்கிழமை 10 தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

நிலைமை குறித்து பேசுவதற்கு அழைக்கப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில், இது ஆபாயகரமான மணித்தியாலமாக இருந்தது என்று அணு கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் ரபாயேல் கிரோசி எச்சரித்துள்ளார்.

இது பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணு நிலையத்துக்குச் செல்ல ஐ.நா நிபுணர்களுக்கு உடன் அனுமதி அளிக்கும்படி சீனா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்தபோதும், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற கோரிக்கைகள் செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணு நிலையத்தைச் சூழ இராணுவ தடை வலயம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முன்னதாக அழைப்பு விடுத்திருந்தது. “அணு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெறும் மோதல்கள் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இராணுவ தடை வலயம் ஒரு தேர்வாக அமையாது என்று குறிப்பிட்ட ரஷ்யாவின் ஐ.நா பிரதிநிதி, அது இந்த ஆலை மேலும் ஆத்திரமூட்டல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு உக்ரைனில் இருக்கும் இந்த அணு நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி மீது கடந்த வாரமும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றது. அது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டின.

ரஷ்யா இந்த நிலையத்தை ஒரு இராணுவத் தளமாக மாற்றி இருப்பதாகவும் அங்கிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உக்ரைனியப் படையினால் பதில் தாக்குதல் நடத்த முடியாத நிலை இருப்பதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.

உக்ரைன் அணுசக்தி நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஒருமுறை சபொரிசியா நிலையம் மற்றும் அணு நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதி மீது ஷெல் தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உருக்கியொட்டற் பகுதிக்கு அருகில் இருக்கும் நிர்வாக அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதாகவும் பல கதிரியக்க சென்சார்கள் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் புல்வெளிப் பகுதியில் சிறிய தீ ஏற்பட்டபோதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அணு நிலையத்திற்கு அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையமும் தாக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

Sat, 08/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை