சுதந்திரக் கட்சி, மொட்டுக்கட்சி; சில விடயங்களில் உடன்பாடு

மே 9இல் அடுத்த சந்திப்பு 

கூட்டணி அமைப்பது தொடர்பில் பொது ஜன பெரமுனவிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில விடயங்கள் தொடர்பில் உடன்பாடு காணப்பட்டதாக இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.இந்த நிலையில், நான்காம் சுற்று பேச்சுவார்த்தை மே 9ஆம் திகதி நடைபெறும்.  

இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.பொது ஜன பெரமுன சார்பில் ஜீ.எல் பீரிஸ், டளஸ் அழகப்பெரும மற்றும் பிரதிநிதிகளும் சுதந்திரக் கட்சி சார்பில் தயாசிறி ஜெயசேகர,திலங்க சுமதிபால,ரோஹன லக்‌ஷ்மன் பியதாச ஆகியோரும் கலந்து கொண்டார்கள். 

பேச்சுவார்த்தையின் இறுதியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த, பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ்  சில விடயங்களில் உடன்பாடு ஏற்பட்ட போதும் சில விடயங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடையவில்லை.

20கொள்கைகள் தொடர்பில் பூரண உடன்பாடு காணப்பட்டது. இது தொடர்பில் கட்சி மத்திய குழு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி கட்சிகள் என்பவற்றுடன் பேசி முடிவு காண வேண்டும். சு.க பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் பேசப்படவில்லை.

ஏனென்றால், கூட்டணி தொடர்பான நிபந்தனைகள், கட்டமைப்பு குறித்து ஆழமாக ஆராய்ந்து உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றார்.  

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சு.க எம்பிகள் வாக்களிக்காததால் அவர்கள் தொடர்பில் கட்சி ஆதரவாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐ.தே.கவிற்கு எதிராக வாக்களிக்க தயாரில்லாத குழுவுடன் கூட்டணி அமைக்க முடியுமா என அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர் என்றார்.  

சு.க செயலாளர் தயாசிறி ஜெயசேகர கூறுகையில், இரு தரப்பும் தொடர்ந்து பேசி வருகிறோம்.பேச்சு தொடரும் நிலையில் ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆராயப்பட்ட விடயங்கள், பேச்சின் தன்மை குறித்து ஆராய இருக்கிறோம். மே 9இல் மீள பேச முடிவு செய்துள்ளோம். ஐ.தே.க எதிர்ப்புக் குழுவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம். இந்த அரசு மாகாண சபைத்தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.(பா)

(கமல் ஜெயமான்ன) 

 

Thu, 04/11/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை