ஒமிக்ரோன் அச்சம்; நெதர்லாந்தில் கிறிஸ்மஸுக்கு முழு முடக்கநிலை

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு பற்றிய கவலைக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது.

இதன்படி வரும் ஜனவரி 14 ஆம் திகதி வரை அத்தியாவசியமற்ற கடைகள், மதுபானக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஏனைய பொது இடங்கள் மூடப்படுகின்றன. விடுமுறை நாட்களில் மொத்தம் நான்கு பேர் என வீடு ஒன்றில் தலா இரு விருந்தினர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாக உள்ளது என்று பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

அதிக மரபணு பிறழ்வு கொண்ட ஒமிக்ரோன் திரிபு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் நெதர்லாந்திலேயே அதிக கண்டிப்பான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் நெதர்லாந்தில் இதுவரை 2.9 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நெதர்லாந்தில் ஒமிக்ரோன் திரிபு சம்பவங்கள் குறைவாக பதிவானபோதும் அது வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. புத்தாண்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் திரிபாக அது மாறக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Mon, 12/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை