உலக சுகாதார அமைப்பினால் கொவிட் ‘சுனாமி’ எச்சரிக்கை

டெல்டா, ஒமிக்ரோன் திரிபுகளால் இரட்டை அச்சுறுத்தல்

டெல்டா மற்றும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபுகள் இணைந்து ஆபத்தான வகையில் கொவிட்–19 சுனாமியை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று சம்பவங்கள் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரான்ஸில் இரண்டாவது நாளாக தினசரி தொற்றுச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 208,000 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரி தினசரி தொற்றுச் சம்பவங்கள் 265,427 ஆக பதிவாகி உள்ளது என்று ஜோன்ஸ் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டென்மார்க், போர்த்துக்கல், பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

போலந்தில் கடந்த புதனன்று கொரோனா தொடர்பில் 794 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது பெருந்தொற்றின் நான்காவது அலையில் அந்நாட்டின் அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கையாகும். இதில் முக்கால் பங்கிற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்களாவர்.

டெல்டா திரிபை விடவும் தீவிரம் குறைந்ததாக இருந்தபோதும் வேகமாக பரவக்கூடியதாகக் கூறப்படும் ஒமிக்ரோன் திரிபு பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நோய்த் தொற்று அதிகரிப்புக்கு இந்த புதிய திரிபு காரணம் என்று நம்பப்படுகிறது. “ஒமிக்ரோன் என்று வரும்போது அதனை நான் அலையாகக் குறிப்பிடமாட்டேன். அது ஒரு பேரலையாக இருக்கும்” என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் ஒட்டுமொத்த தொற்றுச் சம்பவங்களின் பின்னணியில் இரு திரிபுகள் இருக்கும் நிலையில், ‘இரட்டை அச்சுறுத்தல்” இருப்பதாக டொக்டர் டெட்ரோஸ் கூறினார்.

“இது தொடர்ந்தால் சோர்வடைந்திருக்கும் சுகாதார ஊழியர்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீது கடும் அழுத்தம் ஏற்பட்டு உடைப்பை ஏற்படுத்திவிடும்” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது உலகெங்கும் நாளாந்தம் சுமார் 900,000 புதிய சம்பவங்கள் பதிவாவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் மக்கள் தொகை அளவு மற்றும் தடுப்பூசி வீதம் அடிப்படையில் ஜனவரி முடிவில் ஒமிக்ரோன் தொற்று உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான டொக்டர் அன்டோனி பவுச்சி, சி.என்.என் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பல செல்வந்த நாடுகளும் கூடுதல் தடுப்பூசி வழங்கும் பூஸ்டர் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. பிரிட்டனில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 57 வீதமானவர்கள் மூன்றாவது முறை தடுப்பூசி பெற்றுள்ளனர்.

ஆனால் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பணக்கார நாடுகளின் பெரிய அளவிலான பூஸ்டர் டோஸ்கள் “தொற்றுநோயை நீடிக்க செய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். ஏனெனில், அவை ஏழை மற்றும் குறைவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உள்ள நாடுகளிலிருந்து விநியோகங்களைத் திசை திரும்புகின்றன. இது “வைரஸ் பரவுவதற்கும், பிறழ்வதற்கும் அதிக வாய்ப்பை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

“2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ‘உலகில் உள்ள 70 வீதமானவர்கள் தடுப்பூசி செல்லுத்திக்கொள்ளும் விழிப்புணர்வை அனைவரும் புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிட்டத்தட்ட 100 நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் 40 வீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை இன்னும் அடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 26 ஆம் திகதிக்கு முந்தைய வாரத்தில் ஐரோப்பாவில் அனைத்து திரிபுகளின், புதிய கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 57 வீதமாக அதிகரித்து உள்ளது. மேலும், அமெரிக்காவில் 30 வீதம் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று மேலும் பதிவான அதிக எண்ணிக்கைகளுடன், இந்த எண்ணிக்கைகள் ஏறுமுகமாகவே உள்ளது.

Fri, 12/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை