தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 3,250 சம்பளம் வேண்டும்

வெள்ளிக்கிழமைக்குள் முடிவு அவசியம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார  ஆணைக்குழு சட்டத்தின் இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எவர் ஆட்சி செய்த போதும், எமது மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. இருநூறு வருடங்களாக எமது மக்கள் பெரும் கஷ்டங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். உணவு பொருட்களின் விலையேற்றம், மின் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு அமைச்சரவையோ பாராளுமன்றமோ தீர்வை வைத்துள்ளதா? அவர்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? நாட்டில் அதிக வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை, எப்போது அதிகரிக்கப் போகின்றீர்கள் ? அவர்களுக்காக போராட்டத்தை நடத்துவதற்கும் எங்களை அர்ப்பணிப்பதற்கும் நாம் தயராகவே உள்ளோம்.

வெள்ளிக்கிழமைக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். அவர்களின் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். சம்பள நிர்ணய சபையின் ஊடாகவாயினும் அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/23/2023 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை