பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸில் கொவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வரும் ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் முடியுமானவர்களுக்காக தொலைநிலை வேலை கட்டாயமாக்கப்பட்டிருப்பதோடு மூடிய இடத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் எண்ணிக்கை 2,000க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சனிக்கிழமை இதுவரை காணாத அளவுக்கு 100,000க்கு அதிகமான புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தும் திட்டங்கள் இல்லை என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார்.

நோய்த்தொற்று அதிகரிப்பு மற்றும் புதிய ஒமிக்ரோன் திரிபு பிராந்தியத்தை பாதித்திருக்கும் நிலையில் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் கட்டப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் உரையாடிய பிரான்ஸ் பிரதமர், புதிய கட்டுப்பாடுகள் பற்றி அறிவித்ததோடு இந்த பெருந்தொற்று முடிவு அற்ற திரைப்படம்போல் இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று இரண்டு நாளைக்கு ஒருமுறை இரட்டிப்பாவதோடு புதிய சம்பவங்களில் பாரிய அலை ஒன்று பற்றி சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரன் எச்சரித்தார்.

இந்த புதிய கட்டுப்பாடுகளில் வெளிப்புற பொது ஒன்று கூடல்கள் 5,000 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டதோடு, நீண்ட தூர போக்குவரத்துகளில் உண்பது மற்றும் குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதிகள் அடுத்த அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்பதோடு மதுபானக் கடைகளில் மேசைகளுக்கு மாத்திரமே சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நகர மையங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Wed, 12/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை