பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர்

இந்த விடயத்தை சிறிதரன் MP அறிவாரா?

சபையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நேற்று கேள்வி

 

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என்பதை சிறிதரன் எம்.பி அறிவாரா என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவினம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரனின் உரையின் போதுகுறுக்கீடு செய்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி. தனதுரையின்போது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவரான ஞானசாரதேரர், போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் பேசுவதில்லை எனக் கேட்கின்றார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப்பொருள் பாவனை இருந்ததா? கஞ்சா இருந்ததா? அல்லது யாராவது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா? போதை வஸ்து காரணமாக எவராவது பாதிக்கப்பட்டார்களா?

2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே திட்டமிட்டு வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு வழி பகுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் பலதடவைகள் குரல் எழுப்பி உள்ளோம். நாம் போதைவஸ்துக்களுக்கு எதிரானவர்கள் என சிறிதரன் எம்பி தெரிவித்தார்.

அச்சமயம் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர். அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்பது ஸ்ரீதரனுக்கு தெரியுமோ தெரியாது.

அத்துடன் ஸ்ரீதரன் எம்பி தமதுரையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சில அபிவிருத்திகளை வடக்கிற்கு செய்ததாக ஏற்றுக்கொள்கின்றார்.

அதற்கு முன்னர் ஏன் அவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு முன்னர் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அங்குள்ளவர்கள் விடவில்லை, தடைகளையே ஏற்படுத்தினார்கள் என அமைச்சர் பதிலளித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை