அரசாங்கத்துக்கு கைநீட்டவோ அரசியலாக்கவோ வேண்டாம் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

கிண்ணியாவில் இடம்பெற்றுள்ள படகுப் பாதை விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். மேற்படி விபத்தில் பலியானவர்கள் தொடர்பில் சபையில் தெரிவித்த அமைச்சர் இதனை ஒரு மனித படுகொலையாகவே குறிப்பிட முடியுமென்றும் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதுகாப்பு அங்கிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்த அவர்,உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உள்ளுராட்சி சபை மூலமே படகு பாதைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் அரசுக்கு எவரும் கை நீட்ட வேண்டாமென்றும் அதனை அரசியலாக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த விடயத்தில் எவர் தவறு இழைத்திருந்தாலும் எவ்வித பாரபட்சமுமின்றி அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாலத்திற்கான அடிக்கல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நடப்பட்டது என்பதை குறிப்பிட்ட அவர், எத்தகைய டெண்டர் முறையும் பின்பற்றப்படாமல் முறையற்ற விதத்தில் அதற்கான நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன என்பதையும் தெரிவித்தார்.

விபத்து நடைபெற்று பலர் பலியாகியுள்ளதுடன் மேற்படி படகுப் பாதை சேவைக்கு அங்குள்ள நகர சபையே அனுமதி வழங்கியுள்ளதென்பதையும் அவர் குறிப்பிட்டார். எவர் தவறிழைத்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை