மின் உற்பத்தி திட்டங்களை மீள புதுப்பிப்பதே அரசின் எதிர்பார்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கைத் திட்டத்திற்கிணங்க 2030 ஆம் ஆண்டளவில் நூற்றுக்கு 70 வீத மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைமைக்கு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே   தெரிவித்தார். அதேவேளை 2045 ஆம் ஆண்டளவில் அனல் மின் உற்பத்திக்கு விடைகொடுத்து மீள் புத்தாக்க மின் உற்பத்திக்கு செல்வதே அரசாங்கத்தில் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கான தேசிய, சர்வதேச முதலீட்டாளர்களை வரவழைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் 52வது நிறைவு தின நிகழ்வுகள் நேற்று மின்சார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

அரசாங்கம் எப்போதும் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலேயே சிந்தித்து வருகிறது. இறுதியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணத்தை 15 வீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது நெருக்கடியான நிலை காணப்பட்டாலும் நாம் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் அனைத்து துறைகளுக்கும் மின்சாரத்தின் தேவை மிக முக்கியமானது. கொரோனா சூழ்நிலையிலும் எந்த தடையுமின்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் நாட்டின் தேவையில் 40 விதமான தேவையே நிறைவு செய்யப்படுகிறது.

எமது அரசாங்கங்களின் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தனியார் துறையும் மின் உற்பத்தி நிலையங்களை கையாண்டு வருகின்றது. எவ்வாறாயினும் மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை மின்சார சபையே மேற்கொள்கின்றது.

தற்போது பெருமளவு மின் உற்பத்தி எரிபொருளை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றது.75 வீதமான மின்சாரத்தை மீள் புதுப்பிக்கத்தக்க மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்வதே எமது இலக்காக உள்ளது.

சில அரசியல்வாதிகள் கெரவலப்பிட்டி மின்சார நிலையத்தின் மூலமே முழு நாட்டுக்கும் மின்சாரம் கிடைப்பதாக கூற வருகின்றனர். அந்த மின்சார நிலையத்தின் மூலம் நாட்டுக்கு ஐந்து அல்லது ஆறு வீதமான மின்சாரமே பெற்றுக் கொள்ளப்படுகிறது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை