அல் அக்‌ஸாவில் யூதர்கள் தொழ இஸ்ரேலிய நீதிமன்றம் அனுமதி

பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் யூத வழிபாட்டாளர்களுக்கு சாதமாக இஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று அளித்திருக்கும் தீர்ப்பினால் ஜெரூசலத்தில் இருக்கும் இந்த புனிதத் தலத்தின் மீது யூதர்களின் ஆக்கிரமிப்பு பற்றி பலஸ்தீனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் யூத வழிபாட்டாளர்கள் தொழுகையில் ஈடுபடுவது அமைதியான முறையில் இருந்தால் அது ஒரு ‘குற்றச் செயலாக’ அமையாது என்று இஸ்ரேலிய நீதவான் நீதிமன்றம் ஒன்று கடந்த வியாழக்கிழமை அளித்த தீர்ப்பை பலஸ்தீனர்கள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்படும் உடன்படிக்கையின்படி முஸ்லிம் வழிபாட்டாளர்கள் அல் அக்ஸாவிலும் யூத வழிபாட்டாளர்கள் அருகில் உள்ள மேற்கு சுவரிலும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய குடியேறியான ரப்பி ஆர்யே லிப்போ, அல் அக்ஸாவுக்குள் நுழைவதற்கு தமக்கு உள்ள தற்காலிகத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றம் சென்ற நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அவர் தொழுகையில் ஈடுபட்டதை அடுத்தே இஸ்ரேலிய பொலிஸாரால் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த பள்ளிவாசல் வளாகத்தின் அந்தஸ்த்தை பாதுகாக்க அமெரிக்கா தனது உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரபு நாடுகள் பலஸ்தீனர்களுக்கு தமது ஆதரவை வெளியிட வேண்டும் என்றும் பலஸ்தீன பிரதமர் முஹமது இப்ராஹிம் ஷட்டய்யே வலியுறுத்தியுள்ளார். ‘புனித அல் அக்ஸா பள்ளிவாசலில் புதிய நடைறை ஒன்றை அமுல்படுத்த முயற்சிக்கும் இஸ்ரேலுக்கு நாம் எச்சரிக்கை விடுக்கிறோம்’ என்று ஷட்டய்யே குறிப்பிட்டார்.

1994 இல் இஸ்ரேலுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட அல் அக்ஸாவின் காவலர் பொறுப்பை வகிக்கும் ஜோர்தான், ‘இந்தத் தீர்ப்பு, அல் அக்ஸா பள்ளிவாசலின் வரலாற்று மற்றும் சட்ட அந்தஸ்த்தை மோசமாக மீறும் ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

யூதர்கள் டெம்பிள் மௌன்டன் தேவாலயம் என்று கருதும் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் தொடர்ச்சியாக அதிகமான யூத வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பில் பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தலத்திற்கு யூதர்களின் வருகை ஆத்திரமூட்டுவதாகவும் முந்தைய உடன்படிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி இந்தப் பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயற்படும் ஒன்றாகவும் பலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.

ஜெரூசலம் பழைய நகரை இஸ்ரேல் 1967 மத்திய கிழக்குப் போரின்போது கைப்பற்றியது. அந்தப் பகுதியை 1980 இல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்தபோதும் அதனை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.

Sat, 10/09/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை