அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை; அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை; அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை-Fine for Consumer Products Decided to Increased-Lasantha Alagiyawanna

- புதன்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்கும் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போதே இத்திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் எதிர்வரும் வாரம் செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் கூடவுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

செப்டெம்பர் 22ஆம் திகதி புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் தாவர விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

அதேநேரம், செப்டெம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை நாள் முழுவதும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக குறித்த கேள்விகளுக்காக ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட பாராளுமன்ற தினமாக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Sun, 09/19/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை