150 இற்கும் மேற்பட்ட ஊடக கூடங்கள் செயற்பாடுகளை நிறுத்தின

150 இற்கும் மேற்பட்ட ஊடக கூடங்கள் செயற்பாடுகளை நிறுத்தின-150 Media Outlets in Afghanistan Stopped Their Work

காபூல் தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஆப்கானிஸ்தானின் 153 ஊடக கூடங்கள் (Media Outlets) 20 மாகாணங்களில்  தம் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை நாட்டின் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கும் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. 

'இவ்வாறு தம் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள ஊடக கூடங்களில் அச்சு மற்றும் வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளும் அடங்கும். இவை பொருளாதார பிரச்சினைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவே தம் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன என்று அந்த அமைப்புகளை மேற்கோள்காட்டி 'டோலோ நியூஸ்' குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊடகங்களின் நிதி நெருக்கடி தீர்க்கப்படாதுள்ளதோடு அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்தும் கவனம் செலுப்படாதுள்ளன. அதனால் மேலும் பல ஊடக கூடங்கள் தம் செயற்பாடுகளை நிறுத்த வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் ஹுஜத்துல்லா முஜாததி, 'ஊடகங்களை ஆதரிக்கும் அமைப்புகள் ஊடகங்களில் கவனம் செலுத்தவில்லையாயின் நாட்டில் மீதமுள்ள ஏனைய ஊடக கூடங்களும் மூடப்படுவதை எம்மால் விரைவில் காணக்கூடியதாக இருக்கும் என்றுள்ளார். 

'இந்நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு சர்வதேச அமைப்புகளை நாங்கள் கோருகின்றோம். இல்லாவிடில் ஊடக சுதந்திரமும் மனித மற்றும் சிவில் சுதந்திரங்களும் விரைவில் முடிவுக்கு வருமென ஆப்கானிஸ்தான் தேசிய ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதி மஸ்ரூர் லுத்பி குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கும் அமைப்பு, 'பொருளாதார பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளதோடு கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுவது சவால்களை உருவாக்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தலிபான்கள், ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் தொழிலை முன்னெடுக்கவென பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் கடந்த வாரம், காபூலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தலிபான்களால்  தடுத்து நிறுத்தப்பட்டு.

உள்ளூர் பொலிஸ் நிலையமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு இரண்டு அறைகளில் அடைத்து வைத்து நையபுடைத்து, கேபிள்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளன.

Sun, 09/19/2021 - 06:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை