அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் அக்ரஹார சலுகை

அமைச்சர்களான தினேஷ், ஜனக்க பெரும் முயற்சிக்கு பலன்

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோரின் நீண்டகால முயற்சியின் விளைவாக, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பயன்கள் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

2016 ஜனவரி முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கு முந்தைய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதியை செயற்படுத்த கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

01.01.2016 க்கு முன்னர் அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற 271,551 பேர் அக்ரஹார காப்புறுதி சலுகையை பெறுவது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று சபைமுதல்வர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான முதலாவது அமைச்சரவை பத்திரம் 07 ஜூலை 2020 ஆம் திகதி திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், பொது நிர்வாகம், உள் நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக ஜனக பண்டார தென்னகோனும் சமர்ப்பித்தார்கள். 01.01.2016 முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்பட்டு வந்த அக்ரஹார காப்புறுதி திட்ட சலுகையை 01.01.2016 க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டது. இதற்கு 22 ஜூலை 2020 அன்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. தேசிய காப்புறுதி பொறுப்பு நிதிய பணிப்பாளர்கள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது.

பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இதைச் செயல்படுத்த மற்றொரு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார், அதன்படி அரச மற்றும் மாகாண அரச சேவைக்குரிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரே காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்துவதை கட்டாயமாக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக மாதாந்தம் ரூ. 600 மற்றும் ரூ. 400 அறவிடவும் பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்த நிலையில், தற்போதுள்ள சலுகைகளை மேலும் விரிவுபடுத்தி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்த முடிந்துள்ளது. (பா)

Fri, 09/03/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை