தலிபான்களுக்கு எதிராக ஆப்கானியர்கள் அதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம்

கிரேக்க தலைநகரான அதென்ஸ் அமெரிக்க தூரதகத்தின் முன்பாக நூற்றுக் கணக்கான ஆப்கானியர்கள், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம் நாட்டின் மீது கை வைக்காதே என்றும் ஆப்கான் இரத்தம் சிந்துகிறது என்றும் இவர்கள் கோஷமெழுப்பினர்.

'யுத்தமும் வன்முறையும் எங்களுக்கு வேண்டாம். சடலங்களைப் பார்த்து சலித்துப் போய் விட்டோம். இந்த யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். உலகத்திடமிருந்து சமாதானத்தை எதிர்பார்க்கிறோம்' என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒருவரான ஒமி நலியாம் தெரிவித்தார்.

17 வயதான பார்வான் அமிரி, ஆப்கானிஸ்தானில் வாய்மூடிக் கிடக்கும் எமது சகோதரர்களுக்காக குரல் எழுப்பவே தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகத் கூறினார்.

அதென்சுக்கு அருகே ஒரு அகதி முகாமில் தங்கியிருக்கும் இவர், தனது பெற்றோரும் சகோதரியும் ஆப்கானிஸ்தானிலேயே வசிப்பதாக கூறுவதோடு எமக்கென ஒரு தாய்நாடு இல்லையே எனவும் வருத்தப்பட்டார்.

இதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் உள்நாட்டு அலுவல்களுக்கான அமைச்சர்கள் எதிர்வரும் செவ்வாயன்று ஒன்றுகூடி ஆப்கானின் புதிய நிலவரங்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அதன் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

துருக்கி வழியாக கிரேக்கத்துக்குள் ஆப்கானிய அகதிகள் வரக்கூடும் என்பதால் துருக்கி எல்லையோரமாக கிரேக்கம் 40 கி.மீ. நீளமான வேலியை அமைத்துள்ளது. ஐரோப்பாவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு வலயமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Fri, 09/03/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை