ஆட்சியை கவிழ்ப்பதோ அரசுக்கு சேறு பூசுவதோ TNAயின் நோக்கமல்ல

தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இலக்கு

பாராளுமன்றத்தில் சாணக்கியன் MP உரை

ஆட்சியை கவிழ்ப்பதோ அரசுக்கு சேறு பூசுவதோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நோக்கமல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று ஹிஷாலினியின் மரணத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களையும் மலையக தமிழ் மக்களையும் மோத விடும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் நாட்டில் அடிமட்ட மக்கள், நடுத்தர மக்கள்,மேல்மட்ட மக்கள் என மூன்று வகையினர் இருந்தனர். இப்போது அரச தரப்பினர்,எதிர்த்தரப்பினர் அல்லது பணம் படைத்தோர்,பணம் இல்லாதவர்கள் என்ற இரு வர்க்கத்தினர் மட்டுமே உள்ளனர்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரச தரப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் பிரச்சினைகள் தீர்க்க வேண்டியவர்கள். எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்? இன்று ஹிஷாலினியின் மரணத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களையும் மலையக தமிழ் மக்களையும் மோத விடும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. தற்போதைய அரசை கவிழ்ப்பதோ ஆட்சிக்கு வருவதோ, அரசுக்கு சேறு பூசுவதோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நோக்கமல்ல. மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர வேண்டும். ஒரு தொலைபேசி அழைப்பில் என்னால் ஒரு இலட்சம் டொலர் முதலீட்டைக்கொண்டுவர முடியும். அதனை என்னால் தொடர்ந்தும் செய்ய முடியும் . கொரோனா தடுப்பூசி போடுவது மக்களுக்கு செய்யும் உதவியல்ல. அது அரசின் கடமை. அதனை அரசு தொடர்ந்தும் முன் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை