நல்ல தீர்வு கிடைத்தால் நாளையே கற்பித்தலில்

ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கிறது

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் இதயசுத்தியுடன் எமது போராட்டத்திற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும். சரியான தீர்வு பெறப்பட்டால் அடுத்த தினமே ஆசிரியர்களால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் சாதகமான முடிவு பெறப்பட்டு எமது போராட்டம் வெற்றி பெறும் வரை அதிபர்- ஆசிரியர்கள் இப்போராட்டத்திலிருந்து பின்வாங்காது தொடர்ச்சியாக போராட்டத்தை எம்முடன் இணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் (18) அமைச்சரவை உப குழு அதிபர் - ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்க குழுவுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தியது. அதில் அமைச்சரவை உப குழு நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அவர்களுடைய யோசனையை தயாரிப்பதாக தெரிவித்தனர். சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கையாளும் ஒரு அணுகுமுறையாகவே இவ் அமைச்சரவை உப குழு அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பாக கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளமையானது எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதை இழுத்தடிக்கும் முயற்சியாகவே தோன்றுகின்றது. எனினும் நாடு முழுவதும் இடம்பெறுகின்ற அனைவராலும் அறியப்பட்ட எமது போராட்டம் பற்றி புதிய அமைச்சருக்கு மீண்டும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை