ஆப்கானில் தலிபான் துரித முன்னேற்றம்: ஒரே நாளில் 3 முக்கிய நகரங்கள் வீழ்ந்தன

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் தலிபான்கள் மேலும் மூன்று பிராந்திய தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய வடக்கு நகரான குந்துசை கைப்பற்றிய அவர்கள் சரே புல் மற்றும் தலோகான் நகரங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்குள் ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. இதில் குந்தூசில் முன்னேற்றம் கண்டிருப்பது தலிபான்கள் இதுவரையில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அந்தக் குழுவின் பேச்சாளர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ஆப்கானில் அமெரிக்கா தொடர்ந்து தலையிடுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 20 ஆண்டு இராணுவ நடவடிக்கைக்கு பின் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் ஆப்கானில் இருந்து வெளியேற ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே அந்நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது.

தலிபான்கள் அண்மைய வாரங்களில் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதியான கிராமங்களை கைப்பற்றிய அவர்கள் தற்போது சிறு நகர்கள் மற்றும் நகரங்களை இலக்கு வைத்துள்ளனர்.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மணி நேர இடைவெளிக்கும் மூன்று வடக்கு நகரங்கள் தலிபான்களின் வசமாயின. நிலைமை பெரும் குழப்பமாக இருப்பதாக குந்துஸ் குடியிருப்பாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

இதனிடையே முக்கிய நிலைகளை மீட்பதற்கு தமது படையினர் போராடி வருவதாக ஆப்கான் அரசு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் மேற்கு நகரான ஹெரத் மற்றும் தெற்கு நகரங்களான கந்தஹார் மற்றும் லஷ்கர் காஹ்வில் கடும் மோதல் நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வட கிழக்கு நகரான அசாதாபாத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குழந்தைகள் மற்றும் இளம் சிறுவர்கள் உட்பட பல குடும்பங்களும் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

‘எமது கிராமத்தின் மீது பல குண்டுகள் விழுந்தன. தலிபான்கள் வந்து அனைத்தையும் அழித்தார்கள். உதவியற்று நிர்க்கதியான நாம் எமது வீடுகளை விட்டு வெளியேறினோம். மோசமான நிலைகளில் எமது குழந்தைகள் மற்றும் நாம் தரையில் படுத்துறங்குகிறோம்’ இடம்பெயர்ந்து வந்த குல் நாஸ் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘எனது ஏழு வயது மகள் வெளியே சென்றிருந்தபோது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அவளை காணவில்லை. அவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை’ என்று இடம்பெயர்ந்து வந்த மற்றொருவர் குறிப்பிட்டார்.

தலிபான்களின் நிலைகள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் போராளிகள் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கான் இராணுவம் குறிப்பிடுகிறது. ஆனால் லஷ்கர் காஹ்வில் இருக்கும் இரு மருத்துவமனைகள் மற்றும் பாடசாலை ஒன்றின் மீதே வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இரு தரப்பின் கூற்றுகளையும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது.

ஆப்கான் நகரங்கள் மீதான தலிபான்களின் புதிய வன்முறைகளை ஆப்கானில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டித்துள்ளது. ‘வலுக்கட்டாயமாக தமது அதிகாரத்தை செலுத்தும்’ அந்தக் குழுவின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

‘நாட்டின் மனிதாபிமான நிலைமை மோசமடைவது மற்றும் பொதுமக்களின் மனித உரிமை மற்றும் நலன்புரி செயற்பாடுகள் பற்றி அலட்சத்துடன் இருப்பதையே இது காட்டுகிறது’ என்றும் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஆப்கானில் தாக்குதல்களை ஆரம்பித்த தலிபான்கள் இதுவரை பெற்ற முக்கிய வெற்றியாக குந்துஸ் நகரை கைப்பற்றியது பார்க்கப்படுகிறது. 270,000 மக்கள் வாழும் இந்த நகர் நாட்டின் கனிமப்பொருள் நிறைந்த வடக்கு மாகாணங்களுக்கான வாயிலாக பார்க்கப்படுகிறது.

அதேபோன்று இந்த நகரின் நெடுஞ்சாலை காபுல் உட்பட பிரதான நகரங்களை இணைப்பதாக உள்ளதோடு இந்த மாகாணம் தஜிகிஸ்தான் எல்லையை பகிர்ந்து கொள்ளும் சூழலில் இது மூலோபாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது.

இந்த எல்லைப் பகுதி ஆப்கானில் ஓபியம் மற்றும் ஹெேராயின் போதைப் பொருட்களை மத்திய ஆசிய நாடுகளுக்கு கடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அவை ஐரோப்பாவுக்கு கடத்தப்படுகின்றன. குந்துசை கைப்பற்றுவதானது பிராந்தியத்தில் மிக முக்கியமான போதைக் கடத்தல் பாதைகளை கைற்றுவதாகவும் அமைந்துள்ளது.

2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது அந்தக் குழு வடக்கில் பலம்கொண்டிருந்த பகுதியாகவும் குந்துஸ் இருந்ததால் இது ஒரு பெரும் அடையாள வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. அந்தக் குழு இந்த நகரை 2015 ஆம் ஆண்டு பின்னர் 2016 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்போதும் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை