மட்டு.மாமாங்கேஸ்வரர் ஆலயம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது

வழக்கில் தலா 20 ஆயிரம் ரூபாய் அடிப்படையில் 5 பேருக்கு பிணை

அடியார்களை தனிமைப்படுத்த பொலிஸாரின் உதவியை நாடுயுள்ள சுகாதாரப் பிரிவு

மாமாங்க பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவத்தில் அதிகளவான பக்தர்கள் ஒன்று கூடி தீர்த்தமாடியமை தொடர்பாக சுகாதாரப் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

இதன் போது ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அடிப்படையில் 5 பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலய நிர்வாக சபையினரால் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டிருந்தும், வெளிவீதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் கட்டளைகளையும் மீறிய பக்தர்கள் அதிகளவில் திரண்டு தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது. மாமாங்க பிள்ளையார் ஆலயம் 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் ஆலய பிரதம குருக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார். சுகாதார தரப்பின் சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் கலந்து கொண்ட 500க்கு மேற்பட்ட அடியார்களை தனிமைப்படுத்த சுகாதார தரப்பினர் பொலிசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.இதேவேளை இடம்பெற்ற இச் சம்பவம் சம்பந்தமாக மட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கல்லடி குறூப்,மட்டக்களப்பு விசேட, மட்டக்களப்பு குறூப் நிருபர்கள்

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை