உலகின் பல பகுதிகளிலும் கொழுந்துவிடும் காட்டுத்தீ

ஐரோப்பா, அமெரிக்காவில் பெரும் பாதிப்பு

ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில் உட்பட உலகின் பல பகுதிகளில் காட்டுத்தீ துரிதமாகப் பரவிவருகிறது.

கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் டிக்சி காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. குறைந்தது ஐவரைக் காணவில்லை. ஆயிரக்கணக்கானோர் அந்தப் பகுதியைவிட்டு வெளியேற நேரிட்டது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 5,000க்கும் அதிகமான தீயணைப்புப் படையினர் போராடுகின்றனர்.

கலிபோர்னியா வரலாற்றில் அது மூன்றாவது மிகப்பெரிய காட்டுத்தீயாக பதிவாகியுள்ளது.

உலகின் மிகக் குளிரான இடங்களில் ஒன்றான சைபீரியாவின் யாக்குட்ஸ்க் நகரிலும் தீ மூர்க்கமாகப் பரவுகிறது. அங்கு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் வெளியேறியுள்ளனர். தீயைச் சமாளிக்க உதவ ரஷ்ய இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

கிரீஸிலும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ, நாட்டை பெரிதளவில் பாதித்துள்ளது. 2,000க்கும் மேலானோர் படகுகளில் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், காட்டுத்தீ தலைநகர் ஏதென்சை நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.

கிரீஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்திருப்பதே அங்கு கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவ காரணமாகியுள்ளது.

மறுபுறம் ஸ்பெயினிலும் காட்டுத் தீ மோசமான பாதிப்பை ஏற்படத்தியுள்ளது. வெலன்சியா வனத்தில் பற்றிய காட்டுத் தீ வேகமெடுத்து நாளாபுறமும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. 500 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் கருகிய நிலையில் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துருக்கியில் பரவும் தீயை அணைக்க அதிகாரிகள் ஹெலிகொப்டர்களையும் விமானங்களையும் பயன்படுத்துகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அங்குக் காட்டுத்தீ பரவிவருகிறது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். பிரேசிலில் கடந்த 2 ஆண்டுகளில் காணாத அளவுக்குக் காட்டுத்தீ தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஜூலை மாதம் எரிந்த மொத்தப் பகுதிகளை விடச் கடந்த மாதம் கூடுதலான இடங்கள் எரிந்தன. பெரும்பாலான தீச்சம்பவங்கள் மனிதர்களால் மூட்டப்பட்டவை. பிரேசிலின் மத்திய மேற்குப் பகுதியிலேயே வழக்கத்தை விட அதிகமான தீச்சம்பவங்கள் இந்த ஆண்டில் மூண்டுள்ளன. 

Tue, 08/10/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை