வங்குரோத்து பொருளாதாரத்தை மீட்கவே பஷில் முன்வந்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

நாடு எதிர்கொண்டுள்ள வங்குரோத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பஷில் முன்வந்துள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தென்னை மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய உதவிப் பணிப்பாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட 250 குடிமனைப் பயனாளிகளுக்கு தலா இரண்டு கன்றுகள் வீதம் விநியோகிக்கப்பட்டன.

தொடர்ந்து உரையாற்றிய அவர், எல்லாமே வங்கு ரோத்து நிலைக்கு சென்றுவிட்டது என கூறப்படுகின்ற இக்கால கட்டத்தில், சகலவற்றையும் மாற்றியமைக்கும் சவாலை எதிர்கொண்டு நிதியமைச்சராக பஷில் ராஜபக்‌ஷ பாரமெடுத்துள்ளார்.

அவருடைய ஆளுமையை நன்றாகத் தெரிந்தவன் என்ற வகையில், நாட்டில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சி விரைவில் ஏற்படுவது நிச்சயமாகும். அதிலும் குறிப்பாக கிராமிய பொருளாதார அபிவிருத்திகளையும் நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்த அவர் தொடங்கி விட்டார்.

பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது அமைச்சு அலுவலகத்திற்குச் சென்றவர் நள்ளிரவு வரை பணியாற்றினார் என்பதே ஒரு முன்னுதாரணமாகும்.

பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்ற இந்தவேளையில், சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஏற்கெனவே யுத்தத்திற்கு முகம்கொடுத்து அதிகளவான பாதிப்புக்களைச் சந்தித்தது.

ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு. கிராமிய வீட்டுத்திட்டம், பயிர்ச்செய்கைத் திட்டங்கள் என முன்கொண்டு செல்லப்படுகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபன்லகள் உடனடியாக கிடைக்காவிட்டாலும் இவை நீடித்து நிலைக்கும் பொருளாதார நன்மைகளாக உள்ளன என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Wed, 07/14/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை