எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

ஆளுங்கட்சியிலுள்ள 08 கூட்டணி கட்சிகள் யோசனை

மீனவர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் விலை சலுகை கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பிலுள்ள 08 கூட்டணிக் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு இந்த நிவாரண யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். எமது, ஜனநாயக இடதுசாரி முன்னணி, எரிபொருள் விலை அதிகரிப்பை முற்றிலும் எதிர்க்கிறது. எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தால், எங்களிடம் அது தொடர்பில் ஒரு யோசனையும் திட்டமும் உள்ளதென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,

மீனவர்கள், உணவுப் போக்குவரத்து லொரிகள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்துவதே எங்கள் யோசனையாகும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு ஆளும் கட்சிகள் இணைந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையுன் பிரகாரம், மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கு எண்ணெய் விலை உயர்வின் போது நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகள் எங்களிடமுள்ளன. அந்த யோசனையை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு முன்வைக்க உள்ளோம். இந்த திட்டங்களில் மீனவர்கள், உணவு வேன்கள், லொரிகள், பொதுப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்க வேண்டும்.

பெரிய சொகுசு வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் ஒரே மாதிரியாக எரிபொருள் விலையை அதிகரிப்பது பொருத்தமானதல்ல. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும், சொகுசு வாகனங்களுக்கு விசேட எரிபொருள் வரி விதிப்பதில் தவறில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

 

Tue, 06/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை