பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் முழு நட்டஈடு

துரித நடவடிக்கைக்கு அரசு ஏற்பாடு

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈட்டை வழங்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கப்பல் நிறுவனத்திடமிருந்து முழுமையான நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் தமக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பதற்கான காலம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து முழுமையான நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் சட்ட மாஅதிபருக்கு தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்காக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலாவது இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தற்போது சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் சுற்றாடலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அனர்த்தங்கள் தொடர்பில் ஒவ்வொரு துறைகள் தொடர்பிலும் உச்ச அளவில் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய கப்பலின் உரிமையாளர்கள் தரப்பினரிடம் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் கொள்கலன்கள் மூலம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் அதன் முதற் கட்டமாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக அவர்களின் 03 விசேட நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் மேற்படி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Tue, 06/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை