சீரற்ற காலநிலை; 16 பேர் மரணம் 2,70,912 பேர் பாதிப்பு

இருவரை காணவில்லை இருவருக்கு காயங்கள் 10 மாவட்டங்கள் பாதிப்பு கொழும்பு, கம்பஹாவில் அதிகளவு பாதிப்பு

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மழை, வெள்ளப்பெருக்கு காற்றுடன் கூடிய தற்போதைய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 16 பேர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமற் போயுள்ளனர்.

நேற்றுக்காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ள கூற்றுப்படி நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 564 குடும்பங்களைச் சேர்ந்த 02 இலட்சத்து 70 ஆயிரத்து 912 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த பகுதிகளிலுள்ள 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 5,658 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 72 நலன்புரி மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் கம்பஹா மாவட்டமே பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் அங்கு 39 ஆயிரத்து 742 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 11ஆயிரத்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை, தெவனகலகந்த மற்றும் வரக்காப்பொல, அலகமகந்த ஆகிய பிரதேசங்களிலும் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள மண்சரிவுகளில் மேற்படி ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவிக்கிறது.

இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை நாட்டில் 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் மேலும் 817 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

மழை,இடி, மின்னல், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை