கப்பல் தீ விபத்தால் நாட்டுக்கு பெரும் பாதிப்பு

- இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

கப்பல் தீ விபத்தால் எமது நாடு நீண்டகால பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனாவால் பாரிய இழப்புகளை சந்தித்துள்ள சூழலில் நாம் மற்றுமொரு நெருக்கடிக்கும் முகங்கொடுத்துள்ளோம். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் ஏற்பட்டுள்ள கப்பல் தீ விபத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். எமது கடல் வலைய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய நாசகரமான சம்பவமாக இது அமைந்துள்ளது.

சூற்றுச் சூழல் விஞ்ஞான நிறுவனம் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்துள்ளது. மீன்பிடித்துறைக்கு மாத்திரமல்ல எமது நாட்டின் உணவுகள் மற்றும் ஏனைய பல்வேறு துறைகளுக்கு நீண்டகால பாதிப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. உலகில் இரண்டு நாடுகள் இந்தக் கப்பலின் வருகையை நிராகரித்திருந்த சூழலில் எமது நாட்டுக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டதென கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக கருத்தியலை உருவாக்குபவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும். அரச அதிகாரிகளை இந்த விடயம் தொடர்பில் கருத்துகளை வெளியிட வேண்டாமென கூறுகின்றனர். கருத்துச் சுதந்திரம் எமது அரசியலமைப்பில் உள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் எமது நாட்டில் இருண்ட நாளாகும். நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது.

கொவிட் தொற்றை சரியாக முகாமைத்துவம் செய்துள்ள நாடுகள் இன்று எங்குள்ளன. எமது வலையத்தை பாருங்கள். ஒரு சரியான வேலைத்திட்டம் இல்லை. பி.சி.ஆர். பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை. பி.சி.ஆர். பரிசோதனைகள் கிடைக்கப்பெற நீண்டகாலம் செல்கிறது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/07/2021 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை