மன்னாரில் காற்றினால் வீடுகள், தோட்டங்கள் சேதம்

- அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவிப்பு

மன்னார்  மாவட்டத்தில்; செவ்வாய்க்கிழமை (25.05.2021) வீசிய பலத்தின் காற்றினால்  வீடுகள் தோட்டங்கள் பல சேதங்களுக்கு உள்ளாகியதுடன் மரம் வீழ்ந்ததில் ஒருவர்  சிறு காயங்களுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக மன்னார்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன்  தெரிவித்தார்.

மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களாக பலத்த காற்று  வீசிக்கொண்டிருந்தமையால் மன்னார் தென்கடல் பகுதியில் மீனவர்கள் தங்கள்  மீன்பிடித் தொழிலை செய்வதை தவிர்த்து வந்தனர்.

ஆனால் மன்னார் வடகடல்  பகுதியில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லாது கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு  வந்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை (25.05.2021) மன்னாரில் வீசிய பலத்த  காற்றினால் பலதரப்பட்ட சேதங்கள் ஏற்பட்டதாக மன்னார் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 16  குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மடு  பிரதேச செயலகப் பிரிவில் பறசங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில்  ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும், 13 வீடுகள் பகுதியான சேதங்களுக்கு உள்ளாகியதுடன் இரண்டு கடைகளின் கூரைகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்  மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பெரியமடு, வெள்ளாங்குளம்,  தேவன்பிட்டி மற்றும் தேத்தாவாடி ஆகிய பகுதிகளில் ஐந்து ஏக்கர் வாழைத்  தோட்டம் மற்றும் மூன்று ஏக்கர் பப்பாசி மரங்கள் சேதங்களுக்கு  உள்ளாகியதாகவும் தெரிவித்தார்.

அதிகமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இச் சேதங்கள் அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அதிவேக காற்றின் காரணமாக முத்தரிப்புத்துறை  பகுதியில் தென்கடல் நீரானது சுமார் ஐம்பது மீற்றர் தூரம் கிராம பக்கம்  ஊடுருவியதாகவும் கரையோரத்தில் மீனவர்கள் அமைத்திருந்த ஓலை கொட்டில்கள்  காற்றினால் தூக்கி எறியப்பட்டதாகவும் படகு ஒன்று கடலால் ஈத்துச்  செல்லப்பட்டு அயல் கிராம கடற்கரையில் ஒதுக்கிவைத்திருந்ததாகவும் அப்பகுதி  மீனவர்கள் தெரிவித்தனர்.

தாழ்வுபாடு பகுதியில் குடியிருந்த  வீட்டின்மேல் பனை மரம் வீழந்ததில் உயிர் சேதமற்ற தன்மையில் வீடு  சேதத்துக்கு உள்ளாகியது. காற்றின் காரணமாக சில மணி நேரம் மின்சாரத் தடையும்  ஏற்பட்டிருந்தது.

(தலைமன்னார் விஷேட நிருபர் ) 

Thu, 05/27/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை