இஸ்ரேல் - காசா மோதல்: ஐ.நா புலன் விசாரணை

இஸ்ரேல் மற்றும் காசா இடையே இடம்பெற்ற அண்மைய மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக ஒன்பது வாக்குகளும் பதிவாகியுள்ளன.

எனினும் இந்த முடிவு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கு பாதகமாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எகிப்து மத்தியஸ்தத்துடன் கடந்த வாரம் முடிவுக்கு வந்த 11 நாள் மோதலில் காசாவில் குறைந்தது 242 பேர் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 13 பேர் பலியாகினர்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசாவில் இடம்பெறும் உரிமை மீறல்களை அறிக்கையிட நிரந்தர விசாரணைக் குழு ஒன்றை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பதற்றம், ஸ்திரமற்ற சூழல் மற்றும் தொடரும் மோதலுக்கு காரணமான அனைத்து நிலைமைகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவும் இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பேரவை அமர்வை ஆரம்பித்து உரையாற்றிய அதன் தலைவர் மிச்சலே பச்செலெட், காசாவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் போர் குற்றங்களாக கருதப்படலாம் என்று எச்சரித்தார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானத்திற்கு பல மேற்குல நாடுகள் உட்பட ஒன்பது உறுப்பு நாடுகள் எதிராக வாக்களித்ததோடு மேலும் 14 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன. ஆதரவாக வாக்களித்த நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யாவும் அடங்கும்.

இந்த பேரவையின் கண்காணிப்பாளர் அந்தஸ்த்தை மாத்திரமே அமெரிக்கா பெற்றுள்ளது. அந்த நாடு இது தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கவில்லை.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டு ஜெனீவாவில் ஐ.நா அமைப்புக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா மனித உரிமை பேரவை அப்பட்டமான இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருப்பதன் மற்றொரு உதாரணம் இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.

Sat, 05/29/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை