கந்தளாயிலுள்ள வர்த்தக நிலையங்களை 16 ஆம் திகதிவரை மூடுமாறு அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சடுதியாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக, கந்தளாய் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்றிலிருந்து 7 எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்படுவதாக கந்தளாய் பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பிரதேச சபையும், கந்தளாய் வர்த்தக சம்மேளனமும் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் இது வரை 57 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு, இதில் சிலர் குணமடைந்துள்ளதாகவும்,அத்தோடு கந்தளாய் பிரதேசத்தில் இருநூறு குடும்பங்களைச் சேர்ந்த அறுநூறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.டபிள்யு சமன் தெரிவித்தார்.

இதனைக் கருத்திற்கொண்டே பத்து நாட்களுக்கு கந்தளாய் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கந்தளாய் நகரின் அமைந்துள்ள அத்தியவசிய தேவையுடைய வர்த்தக நிலையங்கள் மட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கந்தளாய் நகரம் வெறிச்சோடிக் காணப்படுவதோடு தேவைக்கு செல்லுவோரை மட்டுமே வீதியில் காணக்கூடியதாகவுள்ளது.

நகரில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

கந்தளாய் தினகரன் நிருபர்

Sat, 05/08/2021 - 10:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை