9 மாவட்டங்களில் 105 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

மூன்று மாவட்டங்களிலுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று புதன்கிழமை காலை 06 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 09 மாவட்டங்களில் 105 கிராம சேவகர் பிரிவுகள் இதுவரை கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராமங்களும் புத்தள கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ரத்தன்கம பகுதியும் மாத்தளை மாவட்டத்தின் அலுகொல்ல பகுதியும் அம்பாறை மாவட்டத்தில் குமாரிகம பகுதியுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்களுக்கும் அரச சேவைக்குச் செல்லும் ஊழியர்களுக்கும் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி எவரும் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்ைக எடுக்கப்படும்.

இதேவேளை, ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில் வசித்து வந்தால் அவர் கடமைக்கு சமுகமளிக்காமல் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் இப் பகுதியில் தங்கியிருக்க முடியும். இதற்கான விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 04/29/2021 - 07:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை