பயங்கரவாத தலைவர் இறப்பதில்லை; சர்வதேச குழு அமைத்து விசாரியுங்கள்

- ஐ.ம.சக்தி,பாராளுமன்றில் கோரிக்கை

எங்கேயும் பயங்கரவாத குழுவின் தலைவர் இறப்பதில்லை. இந்த விடயத்தில் சுயாதீன சர்வதேச குழுவொன்றை ஈடுபடுத்தி விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை இந்தியாவிலிருந்து ஒருவர் வழிநடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சம்பவத்தால் நன்மையடைந்தவர்கள் தகவல்களை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டில் சஹராணை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை உத்தரவை பெற்றிருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியையும், அப்போதிருந்த ஜனாதிபதியையும் கொல்ல திட்டமிடப்படுவதாக கூறி, சஹ்ரான் தொடர்பான விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி நாலக சில்வாவை கைது செய்தனர். ஆனால் அந்த நாடகத்தில் தொடர்புபட்டிருந்த நாமல் குமார தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேவேளை கடந்த அரசாங்கத்தில் புலனாய்வு பிரிவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறினர். இப்போது புலனாய்வுத்துறை சிறப்பாக செயற்படுகின்றது என்றால் எங்கே அவர்களால் கைது செய்யப்பட்டவர்கள்? கடந்த அரசாங்கத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை அடிப்படையாக கொண்டே இப்போது விசாரணைகள் நடக்கின்றன.

இச் சம்பவத்தின் பின்னாலிருந்த தலைவர்கள் எங்கே? சி.ஐ.டியின் ரவி செனவிரட்ண விசாரணை குழுவில் இந்த சம்பவத்தின் பின்னால் குழுவொன்று இருந்துள்ளதாக கூறியுள்ளார். ஏன் அதனை மறைக்க வேண்டும்.

சஹ்ரான் குடும்பத்தில் ரில்வான் என்பவர் மணம் முடித்திருந்த சாரா என்ற பெண் மட்டுமே தப்பியுள்ளார். இந்த பெண் தப்பிச் சென்றுள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சாராவை கைது செய்யவில்லை. ஏன் இந்த விடயத்தில் தகவல்களை மறைக்கின்றார்கள். தயவு செய்து சாராவை கொண்டு வாருங்கள், இது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்காது அதனை வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/11/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை