கொரோனா தொற்று உச்சம்: பிரேசிலில் சுகாதார நெருக்கடி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரேசிலின் பெரும்பாலான நகரங்களின் மருத்துவக் கட்டமைப்பு நிலைகுலையும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதாக அந்நாட்டின் பியோக்ரூஸ் என்ற நிறுவனம் எச்சரித்துள்ளது.

27 மாநிலங்களில் 25 இன் தலைநகரங்களில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களில் 80 வீதமானது நிரம்பியிருப்பதாக ரியோ டி ஜெனிரோவைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரேசிலில் கொரோனா தொற்றினால் 1,972 பேர் உயிரிழந்துள்ளனர். இது முன்னர் இல்லாத அளவு தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பாகும்.

இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் பிரேசிலில் 11 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 266,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது உயிரிழப்பு எண்ணிக்கையாக இருப்பதோடு அதிக நோய்த் தொற்று சம்பவங்களிலும் பிரேசில் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.

இதில் ரியோ டி ஜெனீரோ, பிரேசிலியா மற்றும் சாவோ போலோ உட்பட 15 மாநிலத் தலைநகரங்களின் அவரச சிகிச்சை பிரிவு 90 வீதம் நிரம்பி இருப்பதாக பியோக்ரூஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று போர்டோ அலெக்ரே மற்றும் கெம்போ கிராண்டே அகிய இரு நகரங்களிலும் அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் நிரம்பி அளவை மிஞ்சி விட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அளவை விஞ்சிய சுகாதார கட்டமைப்பு நிலைகுலையும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது.

பிரேசிலில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 2000ஐ தாண்டும் நிலை இருப்பதாக அந்நாட்டு நிபுணர்கள் அண்மையில் எச்சரித்திருந்தனர். மத்திய அரசு தேசிய அளவில் தலையிட்டு முகக்கவசம் அணிவது, முடக்க நிலைகளை அமுல்படுத்துவது மற்றும் தடுப்பு மருந்து விநியோகத்தை துரிதப்படுத்துவதன் முலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. எனினும் பிரேசில் மக்கள் தொகையில் 4 வீதமான எட்டு மில்லியன் பேருக்கே இதுவரை முதலாம் கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த செவ்வாய்கிழமை 70,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த வாரத்தை விடவும் 38 வீத அதிகாரிப்பாகும். அமேசன் நகரான மனவுஸைச் சேர்ந்த வேகமாகப் பரவக் கூடிய கொரோனா தொற்றின் புதிய வடிவம் ஒன்று நாட்டில் பரவ ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே அங்கு நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ குறைத்தே மதிப்பிட்டு வருகிறார்.

கடந்த வாரம் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ, “நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள். எவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருப்பீர்கள். அதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மரணத்துக்கு வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரேசில் பிராந்திய அரசுகளே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நவடிக்கைகளில் அதிக அவதானம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 03/11/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை