கொவிட்-19 பரவிய சாத்தியமான நான்கு மூலங்கள் பற்றி அறிக்கை

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது

கொரோனா வைரஸ் தொற்று விலங்கில் இருந்து மனிதனுக்கு தொற்றியிருக்கக் கூடும் என்றும் 2019 டிசம்பரில் அது கண்டறியப்படும் முன்னர் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் பரவி இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருப்பதற்கு சாத்தியம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழுவின் கூட்டு அறிக்கையில் முடிவுக்கு வந்துள்ளது.

கொரோனா தொற்றின் பூர்வீகம் பற்றி சீனாவின் வூஹான் நகரில் நடத்திய விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நோய்த் தொற்றின் தோற்றம் மற்றும் அது 2019 முடிவுக்கு முன்னர் பரவியதற்கான ஆதாரங்கள் பற்றிய எந்த விபரமும் இடம்பெறவில்லை.

வைரஸின் சாத்தியமான நான்கு மூலங்கள் பற்றி இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் இடைநிலை விலங்கு ஒன்றின் வழியாக இந்த வைரஸ் மனிதனுக்கு பரவி இருக்க அதிக சாத்தியம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அந்த விலங்கானது பிடிக்கப்பட்டு பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட காட்டு விலங்கு ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொவிட்–19 வைரஸ் ரகத்துடன் மிக நெருக்கமான வகைகள், வெளவாலில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் உருமாற்றம் இன்னொரு விலங்கு வழி ஏற்பட்டிருக்கலாம் என்று அறிக்கை புலப்படுத்தியது.

இதன்படி இந்த வைரஸின் மூலம் வெளவாலாக இருக்கலாம் என்று நம்பும் ஆய்வாளர்கள் அதன்மூலம் தொற்று ஏற்பட்ட மற்றைய விலங்கு எது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

மற்றது வெளவால் அல்லது எறும்புண்ணி போன்ற இதனை ஒத்த கொரோனா வைரஸை கொண்டிருக்கின்ற விலங்கு ஒன்றில் இருந்து மனிதனுக்கு நேரடியாக தொற்றியிருக்க சாத்தியம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த வைரஸ் உறையவைக்கப்பட்ட உணவு வழி பரவி இருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு கூடத்தில் இருந்து தற்செயலாக இந்த வைரஸ் பரவி இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SARS-CoV-2 ரக வைரஸுடன் தொடர்புடைய எந்த வைரசும், 2019-ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன் ஆய்வுக் கூடத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று அது சுட்டிக்காட்டியது.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு, வைரஸ் பரவலின் தொடக்கத்தைக் குறித்து ஆராய, வூஹான் நகருக்கு ஜனவரி மாதத்தில் சென்றது.

Wed, 03/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை