காணாமல் போனோரது உறவினர்கள் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான நேற்று வடக்கில் காணாமல் போனோரது உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் காலை 10 மணியளவில் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, போராட்ட இடத்துக்கு வருகை தந்த பொலிசார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்து, போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனவும் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கடும் தொனியில் தெரிவித்தனர்.

எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிசாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர். கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர சபை மேயர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சுதந்திரமான நேற்று அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் பிரதேசத்திற்குள் ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தவேண்டாம் என்று உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த உத்தரவையும் மீறி அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை10 மணிக்கு பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இதேபோன்று முல்லைத்தீவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட, ஓமந்தை விசேட நிருபர்கள்

Fri, 02/05/2021 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை