மேல் மாகாணத்தில் 57,000 பேருக்கு நேற்று தடுப்பூசி

பொதுமக்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் 57,000 பேருக்கு கொவிட்19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது கொரோனா நோயாளர்கள் அதிகமாக தனிமைப்படுத்தல் முகாம்களிலேயே பதிவாகின்றனர். சமூகத்தில் பதிவாகும் நோயாளர்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் 27,018 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 17,622 பேருக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 11,710 பேருக்கும் இவ்வாறு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

அதன் பிரகாரம் நேற்று 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுபவர்களுக்கே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. பேலியாகொடை மனிங் சந்தை வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் இங்கு மரக்கறிகளை கொண்டுவரும் சாரதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி முதல் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதுடன், இதுவரை 1,96,163 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளில் பணியாற்றும் 5,000 அதிகாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று இரண்டாவது நாளாக கொவிட் தடுப்பூசிகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வழங்கப்பட்டன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 02/18/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை