நாசாவின் ‘ஆய்வுக்கலன்’ இன்று செவ்வாயில் தரையிறக்க திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கலனை செவ்வாயில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கலன் செவ்வாயின் பூமத்திய ரேகைக்கு வடக்கே ஜெசோரோ என்று அழைக்கப்படும் பள்ளத்தாக்கில் இன்று வியாழக்கிழமை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாயில் கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை கண்டறிவது மற்றும் அந்தக் கிரகத்தின் பாறை மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2030களில் பூமிக்கு திரும்புவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஆய்வுக்கலன் தரையிறங்குவது குறித்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்வதற்கு திட்டமிடப்படவில்லை என்று அதன் பொறியியலாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பயணத் தரவுகளும் அது சரியான நேரம் மற்றும் இடைவெளியில் செவ்வாயில் தரையிறங்குவதற்கான பாதையையே காட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் பெர்செவரன்ஸ் என்ற இந்த ஆய்வுக்கலன் கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி பூமியில் இருந்து செவ்வாயை நோக்கி புறப்பட்டது. இந்த ஆய்வுக்கலனில் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு ஏழு விஞ்ஞான உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் பறக்கும் கருவி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செவ்வாயின் வளிமண்டலத்தில் பறப்பது சாத்தியமா என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 02/18/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை