நாட்டின் எந்த வளங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது

- பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் 

துறைமுகம் மட்டுமன்றி நாட்டின் எந்த வளங்களையும் விற்பனை செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளருமான சாகர காரியவசம் தெரிவித்தார். 

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்த அரசாங்கம் கடந்த நல்லாட்சி அரசாங்கமாகும். துறைமுகம் உட்பட எதனையும் விற்பனை செய்ய எமக்கு எந்தவித திட்டமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர்; பல்வேறு தரப்புகளுடன் நாம் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேச்சு நடத்துகின்றோம். எதனையும் விற்பனை செய்வதில்லை என்ற வாக்குறுதியைத்தான் அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.  

எமது நாட்டிற்கு முதலீடுகள் அவசியமாகும். மிகவும் சிறப்பாக செயற்பட்ட பொருளாதாரத்தை வீழ்ச்சிபெறச் செய்து மீண்டும் குண்டுவெடிப்பு நிகழும் நாடாக கடந்த அரசாங்கம் நாட்டை மாற்றியது.   அதனிடையே ஏற்பட்ட சவாலுக்கு மத்தியில்தான் எமது அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள எந்த சொத்துக்களையும் விற்பனை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தார். 

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாகர காரியவசம் எம்.பி:  இன்றும் 9 மாகாண சபைகளும் செயற்படுகின்றன. துரதிஸ்டவசமாக மக்களின் பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டிய சபைகள், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றன.   அது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். அரசாங்கம் என்பது கட்சிகள் இணைந்ததாகும்.தற்போது இயங்குகின்ற முறையானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.(ஸ)    

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 12/29/2020 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை