இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 36 இந்திய மீனவர்கள் நேற்று கைது

05 இழுவைப்படகுகளும் கடற்படை வசம்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு கடற்பகுதிகளிலும் கடற்படையினரும் கடற்பகுதி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட  நடவடிக்கையின் போதே மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 5 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாட்டு மீனவர்களால் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்பரப்பிற்குள் வெளி நாட்டு மீனவர்கள்அத்துமீறி பிரவேசிப்பதால் உள்ளுர் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் இடம்பெறுவதுடன் மீன் வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன அதனை கருத்திற் கொண்டே கடற்படையினரால் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கில் கடற்படையினர் நெடுந்தீவு பிரதேச கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 22 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன் 03 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை மன்னார் வடக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டும் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுமுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை