கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களது உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதா?

அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என்கிறார் அமைச்சர் கெஹலிய

கொரோனாவினால் உயிரிழக்கும் சடலங்களை மாலைதீவிற்கு அனுப்ப அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலே அரசாங்கம் இது தொடர்பில் செயற்படுகிறதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் Zoom ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, உலக சுகாதார ஸ்தாபன பரிந்துரையின் படி நிபுணர் குழு முடிவுகளை எடுத்து வருகிறது.இடைக்கிடை யோசனைகள், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போது அவை நிபுணர் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. நிபுணர் குழுவொன்றை நியமித்தால் அதன் ஆலோசனைகளை தான் பெற வேண்டும். இல்லாவிட்டால் தன்னிச்சையாக முடிவு செய்ய வேண்டும். அதன்படியே நிபுணர் குழுவின் ஆலோசனைகளை பெற்று அரசாங்கம் செயற்படுகிறது.

சடலங்களை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல யாராவது யோசனை முன்வைத்தால் அதனையும் நிபுணர் குழுவிற்கு முன்வைத்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்ததாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்படவில்லை. கைதிகள் விடயம் போன்றே இந்த விடயம் தொடர்பிலும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது என்றார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி கூறியது தவறானதா? என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவையில் இது பற்றி ஆராயப்படாத போதும் இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிவிக்கிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 

 

Wed, 12/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை