ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்தல் சபை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின் உரையாற்றிய அவர், “அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது,” என்று கூறினார்.

ஆனால், அது “மீண்டு வரக்கூடியது, உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது “ என்றும் தனது உரையில் பைடன் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தேவையான சில இறுதி கட்ட நடவடிக்கைகளில் தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடிப் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதும் ஒன்றாக இருந்தது. இந்த நகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடன் 306 தேர்தல் சபை வாக்குகளை வென்றதோடு குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் 232 இடங்களையே வென்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாக 270 தேர்தல் சபைகளை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தேர்தல் சபை வாக்கெடுப்பின் முடிவுகள் அனைத்தும் தலைநகர் வொஷிங்டன் டி.சிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு வரும் ஜனவரி 16ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேர்தல் சபை வாக்குகள் எண்ணப்படும்.

இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமை வகிப்பார்.

இந்த நடவடிக்கை வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடன் ஜனாதிபதியாகவும், கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவி ஏற்க வழிவகுக்கும். தேர்தல் சபை உறுப்பினர்களால் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதாக நவம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல், தேர்தலில் மோசடி நடந்தது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் டிரம்ப்.

Wed, 12/16/2020 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை